‘தமிழி’ நிரலாக்கப் போட்டி: மொழி நுட்பத்தில் சாதனை படைத்த இளைஞர்கள்!
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ் மொழியையும், அதன் நுட்பத் தேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவும் புதிய படைப்புகளை உருவாக்கவும், தமிழி மொழிநுட்ப நிரலாக்கப் போட்டி மதுரையில் நடைபெற்றது.
07:31 AM May 03, 2025 IST | Web Editor
Advertisement
மொழி நுட்பத்தில் புதுத்தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஸ்டார்டப்-டிஎன் அமைப்பும், தமிழுக்கு புதிய படைப்புகளை மொழி நுட்பத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் திரள், வாணி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘தமிழி’ மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியை அறிவித்திருந்தது.
மூன்று மாதங்களாக நடந்து வந்த இந்த தமிழி நிரலாக்கப்போட்டி நேற்று இறுதிச் சுற்றுடன் நிறைவு பெற்றது. இந்தத் தமிழ் மொழிநுட்ப நிரலாக்கப்போட்டியில் மாணவர்களும், மொழி வல்லுநர்களும், தொழில்முனைவோர்களும் கலந்து கொண்டு தமிழ் சார்ந்த மென்பொருட்கள், செயற்கை நுண்ணறிவுச் செயலி, மொழிக் கருவிகள் போன்ற தமிழுக்கான நுட்பக் கருவிகளை உருவாக்கினார்கள். இதில் தமிழ்நாடு மலேசியா, ஜப்பான், கர்நாடக, ஆந்திரா உட்பட பல ஊர்களிலிருந்து 142 அணிகள் விண்ணப்பித்திருந்தனர்.
போட்டியில் உணர்ச்சிகளையும், மூல மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் தீர்வை உருவாக்கிய, திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும், ஜெம்மா மொழி மாதிரியை தமிழ் நடைக்கு ஒத்தியைவு செய்த கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடமும், பண்பாட்டுச் சுற்றுலாச் செயலியை உருவாக்கிய சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

மேலும் சிறப்பாக செயல்பட்ட ஐந்து மாணவ அணிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன. மாணவரல்லாத பிரிவில் சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர்வொர்க்ஸ் ராஜரத்திணம் மகளிர் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மியூசிக்களி நிறுவனமும் முதல் பரிசைப் பெற்றனர். மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசியர்கள் மற்றும் ஆரியல் லேப்ஸ் இரண்டாம் பரிசைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டார்டப்-டிஎன் இணை துணைத் தலைவர் ஸ்டாலின் ஜேக்கப், டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் ஜே. கே. முத்து, தேசிய தகவலியல் மைய மேனாள் துணை இயக்குநர் முனைவர் இ.இனியநேரு, சேவ்மாம் செந்தில்குமார், விக்னேஷ் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டினர்.
Advertisement