"தலைவன் தலைவி" திரை விமர்சனம் - இது மதுரை ஸ்டைல் காரசார கறி விருந்து!
விஜய்சேதுபதி நடித்த தலைவன் தலைவி, வடிவேலு நடித்த மாரீசன், பவன்கல்யாணின் ஹரிஹர வீரமல்லு மற்றும் மகா அவதார் நரசிம்மா ஆகிய 4 படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படங்களில் திரைவிமர்சனங்களை பார்க்கலாம்.
தலைவன் தலைவி :
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நித்யாமேனன், யோகிபாபு, காளிவெங்கட், தீபாசங்கர், பருத்திவீரன் சரவணன் உள்ளிட்டோர் நடித்த மதுரை மண் மணக்கும், காரசார பக்கா கமர்ஷியல் படம் தலைவன்தலைவி. மதுரையில் அசைவ ஓட்டல் நடத்தும் விஜய்சேதுபதிக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த நித்யாமேனனுக்கும் சில, பல எதிர்ப்புகளை மீறி திருமணம் நடக்கிறது. ஆரம்பத்தில் ஓட்டல், காதல், பாசம் என நன்றாக செல்லும் இவர்களின் வாழ்க்கை, ஒரு கட்டத்தில் ஈகோ, குடும்ப பிரச்னைகளால் தடுமாறுகிறது.
கைகுழந்தையுடன் அம்மா வீட்டுக்கு செல்கிறார் நித்யாமேனன். அம்மா மற்றும் குடும்ப சிக்கல்களால் அவருடன் சேர முடியாமல் தவிக்கிறார் விஜய்சேதுபதி. அந்த சமயத்தில் குல தெய்வம் கோயிலுக்கு மகளுக்கு முதல் மொட்டை போட வருகிறார் நித்யாமேனன். நாங்கள் இல்லாமல் மொட்டை போடுவதா என்று விஜய்சேதுபதியும் அங்கே சென்று சண்டைபோட, அந்த சண்டையில் மற்ற உறவினர்கள், வேறு சிலர் கலந்து கொள்ள அடுத்து என்ன நடக்கிறது. விஜய்சேதுபதி, நித்யாமேனன் சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
ஆகாசவீரனாக வரும் விஜய்சேதுபதியும், பேரரசியாக வரும் நித்யாமேனன், காதல், சாங், ஈகோ, சண்டை, பாசம் என அனைத்து விஷயத்திலும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிப்பில் அவ்வளவு எனர்ஜி. ஆடுகிறார், பாடுகிறார், பதுங்குகிறார், அடிக்கிறார், அழுகிறார், மன்னிப்பு கேட்கிறார். நித்யாமேனன் தேசியவிருது வாங்கியவராச்சே? ரொமான்ஸ், ஓட்டல், கோயில் காட்சிகளில் பின்னி எடுத்து இருக்கிறார். திருடனாக வரும் யோகிபாபுவும் அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார். விஜய்சேதுபதி அம்மாவாக வரும் தீபாசங்கர், நம் குடும்பத்தி்ல பார்க்கும் அம்மாக்களை பிரதிபலிக்கிறார். காளி வெங்கட்டுக்கு அருமையான குணசித்திர வேடம். பொட்டால முட்டாய் பாடலில் சந்தோஷ் நாராயணன் கலக்கியிருக்கிறார். கோயில் வளாகம், ஓட்டல், பாடல் காட்சிகளில் சுகுமார் கேமரா வொர்க் அருமையாக உள்ளது.
படத்தில் சில இடங்களில், பல கேரக்டர்கள் ஓவராக பேசுகிறார்கள். அந்த சத்தத்தை குறைத்து இருக்கலாம். படம் முடிந்தபின்னும் கிளைமாக்ஸை இழுக்கிறார்கள். இப்படி சில குறைகள் இருந்தாலும், மதுரை மண் மணத்துடன், காரசார விருந்து படைத்திருக்கிறார் பாண்டிராஜ். குடும்பத்தில் ஆயிரம் பிரச்னைகள் வரும், உறவினர்கள் அப்படி இப்படி நடந்து கொள்வார்கள், கணவன், மனைவி இடையே ஆயிரம் கருத்து வேறுபாடு வரும். அதை எல்லாம் உட்கார்ந்து பேசினால் சரியாகவிடும். மனம் விட்டு, ஈகோவிட்டு பேசினால் பிரச்னைகள் பறந்து போகும், விவகாரத்தெல்லாம் எதுக்கு என்ற அழுத்தமான விஷயத்தை கமர்ஷியல் பாணியில் சொல்லி, இந்த வார படங்களில் முன்னணியில் இருக்கிறது தலைவன் தலைவி.
மாரீசன் :
பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வரும் திருடனான பகத்பாசில், பெரியவரான வடிவேலு பேங்க் கணக்கில் இருக்கும் 25 லட்சம் பணத்தை எப்படியாவது திருட வேண்டும் என்று நினைக்கிறார். காரணம், வடிவேலுக்கு அல்சைமர் என்ற ஞாபக மறதி நோய். அவரிடம் இருந்து ஏடிஎம் பின் நம்பரை தெரிந்து கொண்டால், பணம் நமக்குதான் என கணக்கு போடுகிறார். அதற்காக, வடிவேலு பேச்சை கேட்டு பைக்கில் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை, கோவை என அவருடன் சுற்றுகிறார். பல வழிகளில் வடிவேலுவை ஏமாற்ற நினைக்கிறார். ஆனால், இடைவேளைக்குபின் கதையில் பரபரப்பு திருப்பம். அப்பாவி போல நடித்து சிலரை போட்டு தள்ளுகிறார் வடிவேலு. அதற்காக பகத்பாசிலை மறைமுகமாக பயன்படுத்திக் கொள்கிறார். வடிவேலு யார்? அவர் கொல்வது யாரை? என்ன காரணம். பகத்பாசிலுக்கு என்ன ஆனது என்பது மீதிக்கதை.
சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை சுதீஷ்சங்கர் இயக்கி இருக்கிறார். படத்தின் முதற்பாதி பயணம், காமெடி, பகத்தின் பக்கா திட்டம், வடிவேலுவின் மறதி, அப்பாவிதனம் என மெதுவாக நகர்கிறது. 2ம் பாதி போலீஸ் துரத்தல், வடிவேலுவின் பிளான், அவரின் பிளாஷ்பேக், பகத்பாசிலில் பயம் என செல்கிறது. வடிவேலு மனைவியாக புதுவசந்தம் சித்தாரா வருகிறார். அவரின் உடல்நலப்பிரச்னையால் சில தவறுகள், அதை கொலை மூலம் வடிவேலு சரி செய்வதாக கதை விறுவிறுப்பாகிறது.
குறிப்பாக, பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை, அதை செய்பவர்களின் கொடூர எண்ணம், அதற்கு தீர்வு ஆகியவற்றை பேசுகிறது. வடிவேலு இருக்கிறார், பகத் இருக்கிறார். கோவை சரளா இருக்கிறார். காமெடி இருக்கும் என நினைத்தால் ஏமாற்றமாக இருக்கும். பகத் நடிப்பை, வடிவேலு நடிப்பை, கதையில் கருவை ரசித்தால் மலையாள படம் பார்க்கும் பீல் கிடைக்கும். விவேக்பிரசன்னா மாறுபட்ட ரோலில் வருகிறார். யுவன் பின்னணி இசையும், அதில் வடிவேலு பாடுவதும் படத்துக்கு பிளஸ்.
முதற்பாதி மெதுவாக நகர்வதும், சில காட்சிகள் ரொம்ப அமைதியாக இருப்பதும் மைனஸ். ஆனாலும், வடிவேலு மாதிரியான நடிகர்கள், தங்கள் பாணியை மாற்றி, இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு கதையில் நடித்தற்காக பாராட்டலாம். பெண் குழந்தைகள் வீட்டில் ஏதாவது சொல்ல நினைத்தால், அதற்கு நேரம் ஒதுக்கி, அவர்களின் பிரச்னைகளை கேளுங்க, அவர்களுக்கு பள்ளியில், வெளியிடத்தில் பலவகை சிக்கல் வரலாம், அதை குடும்பத்தினர் காது கொடுத்தால் கேட்பது நல்லது என்ற கருத்தை, பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் மாரீசன் சொல்கிறது.
வழக்கமான மசாலா படம் இல்லை. ஒரு கருத்தை சொல்ல வருகிறது. ஆகவே, கொஞ்சம் பொறுமையாக பார்க்க வேண்டும்.
ஹரிஹர வீரமல்லு :
கிபி 16ம் நுாற்றாண்டில் கதை நடக்கிறது. டெல்லியில் முகலாய பேரரசர் அவுரங்க சீப் வீற்றிருக்கும் அரியணை யான மயிலாசனம் மீது இருக்கும் உலகப்புகழ் பெற்ற கோகினுார் வைரத்தை திருட நினைக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் திருடனான பவன்கல்யாண். அந்த வைரத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு. அதை திருட சொல்பவர்கள் யார்? அவுரங்க சீப்புக்கும், பவன் கல்யாணுக்கும் என்ன பகை? இருவரும் சந்தித்தார்களா? வைரம் திருடப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ஹரிஹரி வீரமல்லு. இது ஹீரோ பவன் கல்யாண் கேரக்டர் பெயர்.
வெள்ளைக்காரர்களிடம் இருந்து கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு கொடுப்பது, லோக்கல் திவான் அரண்மனையில் இருக்கும் நாட்டியக்காரி நிதிஅகர்வால் மீது காதல், திவான் வசம் இருக்கும் வைரங்களை கொள்ளை அடிப்பது, கோல்கொண்டா அரசரிடம் ஹீரோ மாட்டுவது என முதற்பாதி வேகமாக செல்கிறது. கோல்கொண்டா அரசுக்கு சொந்தமான கோகினுார் வைரத்தை மீட்க, ஒரு அணியுடன் ஹீரோ டில்லி செல்வது, அங்கே சந்திக்கும் சவால், அவுரங்க சீப்பின் கொடுமைகள், கடைசியில் அவரை சந்திப்பது என இரண்டாம்பாதி நகர்கிறது.
ஆக் ஷன் காட்சிகளில் துாள் பறத்துகிறார் பவல்கல்யாண், அவரின் அறிமுக சண்டைக்காட்சி, சார்மினார் பின்னணியில் வைரத்தை கொள்ளை அடிக்கும் சண்டைகாட்சி, கிளைமாக்சுக்கு முந்தைய சண்டைக்காட்சிகளி்ல பின்னி எடுத்து இருக்கிறார். அந்த கால கோட்டை,அரண்மனை, துறைமுகம், முகலாய அரசின் கீழ் இருக்கும் நகரங்கள் என செட்டில், அந்த உலகத்தை கொண்டு வந்து இருக்கிறார் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, தாரா பாடல், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி.
ஆனாலும், முதற்பாதியில் இருக்கும் வேகம், அடுத்த பாதியில் குறைகிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ், அந்த கிராபிக்ஸ் நம்பும்படியாக இல்லை. நிதிஅகர்வால் போர்ஷன், அவரின் பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. கேமரா வொர்க், அந்த கால உடை, கலாச்சாரம் ஓகே. ஆனால், படத்தில் பல இடங்களில் பவன்கல்யாணின் கட்சி கொள்கை, அவர் சார்ந்த மத கொள்கை சம்பந்தப்பட்ட வசனங்கள் அதிகம் திணிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் மத வெறுப்பு, முகலாய அரசின் பாரபட்சம் வெளிப்படையாக காண்பிக்கப்படுகிறது. அது பலரை வெறுக்க வைக்கிறது. ஒரு சிலரை ரசிக்க வைக்கலாம். கமர்ஷியல் சினிமாவில் இப்படிப்பட்ட கருத்துகள் தேவையா என்ற கேள்வி வருகிறது. ஒரு பேரரசருடன், ஒரு திருடன் சண்டைபோடுவது அல்லது திருடன் குறித்து பேரரசர் வியப்பது பக்கா சினிமாதனம். சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் ஒரு வித நாடகத்தன்மை, பிரச்சார நெடி. பவன்கல்யாண் ரசிகர்களுக்கு,அந்த கொள்கையை ஏற்பவர்களுக்கு படம் பிடிக்கலாம். கோகினுார் வைரம் சம்பந்தப்பட்ட நல்ல கதை, அதை வேறு மாதிரி எடுத்து திசை திருப்பி இருக்கிறார்கள்.
மஹாவதார் நரசிம்மா :
நரசிம்ம அவதாரம் தோன்றிய கதை, பக்த பிரகலாதா புராணக்கதையை இந்தியாவில் பல மொழிகளில் எடுத்து இருக்கிறார்கள். இப்போது அதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனிமேஷன் டெக்னாலஜியில் அஷ்வின் குமார் எடுத்த படம் மகாஅவதார் நரசிம்மா. பிரகலாதன் பிறப்பு, அவர் தந்தையான ஹிரண்யகசிபு அராஜகம், பூமாதேவி, விஷ்ணு என புராண விஷயங்களை படு நேர்த்தியான அனிமேஷனில் உருவாக்கி இருப்பது படத்தின் பிளஸ்.
குறிப்பாக, ஒவ்வொரு கேரக்டரின் டிசைன், ஆன்மிக காட்சிகள், சண்டைக்காட்சிகள், நரசிம்மர் தோன்றும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. அதற்கு சாம் சி.எஸ் இசையும், படக்குழுவின் உழைப்பும் கூடுதல் பலமாக உள்ளது. திரைக்கதையிலும், டெக்னிக்கல் விஷயத்திலும் இயக்குனர் அஸ்வின் குமார் மிரட்டியிருக்கிறார். குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்