தைப்பூச திருவிழா - பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !
முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த நிலையில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் முத்துகுமார சுவாமி வள்ளி – தெய்வானை சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருகி வழிபட்டனர்.
இதையொட்டி பழனி நகரில் நேற்று காலை முதலே பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவை காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் ஆடிய காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது.
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒட்டன்சத்திரம் – பழனி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோயிலுக்கு வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேருந்து சேவை இயக்கப்படுகிறது. நேற்று (பிப். 10) முதல் பிப். 12 வரை சண்முக நதி மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பழனிபேருந்து நிலையத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா டவுன் பேருந்து இயக்கப்படுகிறது. அதேபோல் பிப். 12 வரை கட்டணமில்லாமல் முற்றிலும் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ₹20 மற்றும் ₹200 கட்டண தரிசனம் 3 நாட்களுக்கு கிடையாதென கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.