#Thailand | சுற்றுலா பேருந்து மரத்தில் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக் அருகே உள்ள சமுத் சகோன் மகாணத்தைச் சேர்ந்த சிலர் தெற்கு தாய்லாந்தில் உள்ள யாலா மாகாணத்திற்கு பேருந்தில் சுற்றுலா சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பேருந்து சூரத் தானி மாகாணத்தில் உள்ள சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 30 பேர் காயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் தெரியாததை அடுத்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.