தாய்லாந்து - கம்போடியா ராணுவ மோதல் 12 பேர் பலி; நீடிக்கும் எல்லைப் பிரச்சினை!
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை, தற்போது பெரும் மோதலாக வெடித்துள்ளது. வியாழக்கிழமை அதிகாலை முதல் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல், இரு தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளின் உறவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்தின் மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பொதுமக்கள். இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கம்போடியா தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இன்னும் எந்த வித தகவலும் இல்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்திய போது கம்போடியா ராணுவம் எல்லைப் பகுதியில் தாய்லாந்து படைகளைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக தாய்லாந்து கூறுகிறது. ஆனால், தாய்லாந்து வீரர்கள் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கெமர்-இந்து கோவிலை நோக்கி, முந்தைய ஒப்பந்தத்தை மீறி முன்னேறியதால் மோதல் தொடங்கியதாக கம்போடியா குற்றம் சாட்டுகிறது. மோதல் விரைவாக அதிகரித்த நிலையில் கம்போடியா ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து குற்றம் சாட்ட, பேங்காக் கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதனால் தாய்லாந்து தனது கம்போடியாவுடனான எல்லையை மூடியுள்ளது. அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தியதாக தாய்லாந்து ராணுவத்தை குற்றம் சாட்டி, கம்போடியா தனது தாய்லாந்து உடனான உறவைக் குறைத்துள்ளது.
மேலும் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள தங்கள் குடிமக்களை வெளியேறுமாறு இரு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன. தாய்லாந்து தற்போது 40,000 பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளது.
இந்த எல்லைப் பிரச்சினை ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. கம்போடியா பிரெஞ்சு ஆக்கிரமிப்பில் இருந்தபோது இரு நாடுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட நாளிலிருந்து இந்த பிரச்சினை நீடிக்கிறது.
2008 ஆம் ஆண்டில், சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 11 ஆம் நூற்றாண்டு கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகப் பதிவு செய்ய கம்போடியா முயன்றபோது, பிரச்சினை பகிரங்க விரோதமாக மாறியது. இதற்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பிறகு இரு தரப்பிலும் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த மே மாதம் ஒரு கம்போடிய வீரன் மோதலில் கொல்லப்பட்ட பிறகு சமீபத்திய பதட்டங்கள் அதிகரித்தன. இது இருதரப்பு உறவுகளை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றது. கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளும் ஒன்றையொன்று எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கம்போடியா தாய்லாந்தில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இறக்குமதியை தடை செய்ததுடன், மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் இறக்குமதி செய்வதை நிறுத்தியது. இரு நாடுகளும் அண்மைய வாரங்களில் எல்லையில் படைகள் இருப்பை பலப்படுத்தியுள்ளன.