ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம்!
புதிய வருமான வரி சட்டம் 43 B(h)க்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மார்ச் 31-ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம் 43 B(h) -ன் படி, இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்று இருந்தால் அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் சிறு, குறு தொழில்களை பாதிக்கும் என வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் இன்று ஜவுளி கடை வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைதறி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஈரோடு பகுதியில் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.