டெஸ்ட் கிரிக்கெட் | ஒரு வருடத்தில் 50 விக்கெட்… கபில் தேவ் சாதனையை சமன் செய்த #Bumrah!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் 50 விக்கெட் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற சாதனை பும்ரா படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று (டிச.6) தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார். இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்தது. மெக்ஸ்வீனி 38 ரன்னும், லபுஸ்சேன் 20 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 94 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய பும்ரா இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 விக்கெட்டை கைப்பற்றிய 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா சமன் செய்தார். இதற்கு முன் 1979, 1983-ம் ஆண்டுகளில் கபில் தேவ் 2 முறை 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த சாதனையை முதல் முறையாக படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜாகிர் கான் 2002-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர்களுக்கு பின்னர் 22 வருடங்கள் கழித்து ஒரே வருடத்தில் 50 விக்கெட் எடுத்து பும்ரா வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.