மாஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் | பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் நேற்று மாலை அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி பயங்கரமாக சுட்டுத்தள்ளினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இசை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
போர்க்களம் போல் காட்சி அளித்த அப்பகுதியில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி, தங்களது உயிரைக் காப்பாற்ற முயன்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியால் வெளியான நெருப்பு மூலம் இசை அரங்கே கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்த தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைத்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உக்ரைன் போரின் நாட்டில் குறையாத நிலையில், இந்த தாக்குதல் நாட்டுப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாஸ்கோ நகரின் மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
We strongly condemn the heinous terrorist attack in Moscow. Our thoughts and prayers are with the families of the victims. India stands in solidarity with the government and the people of the Russian Federation in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) March 23, 2024
இந்த நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், 'மாஸ்கோவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் ரஷிய அரசாங்கத்துடனும், மக்களுடனும் இந்தியா துணை நிற்கும்' என குறிப்பிட்டுள்ளார்.