சீனாவில் பயங்கர புயல் - 50 கிலோவுக்கு குறைவானவர்கள் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை!
சீனாவின் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது. மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சீனாவில் விமானம் தரையிறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருப்பிடங்களிலிருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறு மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த புயல் காற்றினால் 50 கிலோவுக்கும் குறைவான எடைகொண்டவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக சீனாவிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சீனா எதிர்கொள்ளும் பெரிய புயல் தாக்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.