பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் இஸ்வந்த் (6). இவர் நேற்று முன்தினம் (பிப். 23) மாலை வீட்டிற்கு முன் விளையாடிக்கொண்டு இருந்தார். அதன் பின் இரவு 7 மணியளவில் தன் வீட்டிற்கு முன் கிடந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு இருந்த பாம்பு ஒன்று திடீரென இஸ்வந்த்தை கடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்வந்த் பயத்தில் கத்தி துடித்தான். அப்போது அந்த சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் பார்ப்பதற்குள் அந்த பாம்பு புதருக்குள் சென்றது. பின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மானூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து தன்பெற்றோரின் கண் முன்னே 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.