ஓய்வு குறித்து கேள்விக்கு சுவாரஸ்ய பதில் அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்!
37 வயதாகும் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது ஓய்வு குறித்த கேள்விக்கு சுவாரஸ்ய பதில் அளித்துள்ளார்.
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் முசெட்டி (இத்தாலி) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், முசெட்டியை வீழ்த்தி 10வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதனையடுத்து நாளை நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், அல்காரசுடன் மோத உள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய நோவக் ஜோகோவிச் கூறியதாவது, "வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. உண்மையை சொல்ல வேண்டுமானால் வெற்றிக்கு எந்த ரகசியமும் இல்லை. குடும்பம், உணவு முறைகள், உடற்பயிற்சி, தூக்கம், நமது எண்ணங்களை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என பல காரணிகள் இருக்கின்றன.ஆனால் இதுவும் எளிமையான ஒன்றுதான். பலரும் கடின உழைப்பை சொல்லுவார்கள். ஆனால் நான் திறமையான உழைப்பை சொல்லுவேன். அல்கராஸ் தலைசிறந்த டென்னிஸ் வீரர். அவரது ஸ்டைல் மக்களுக்கு பிடித்திருக்கிறது. வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார். அதில் சந்தேகமில்லை.
பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லுவார். ஆனால் நாளை நான் வெல்ல நினைக்கிறேன். நான் ஓய்வுபெற்ற பிறகு அவர் பட்டங்கள் வென்று கொள்ளட்டும் (சிரிக்கிறார்). நான் எனது 50 வயதில் ஓய்வு பெறுவேன்(சிரிக்கிறார்). அல்கராஸ் கடந்தாண்டு என்னை 5 செட் த்ரில்லரில் வென்றார். நான் எனது முழு திறனையும் வெளிப்படுத்தி அல்கராஸை வெல்ல நினைக்கிறேன்" என்றார்.