#Tenkasi | விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தென்காசி அருகே யானைகள் விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். அவ்வாறு வலவிலங்குகள் விவசாய நிலங்களை நாசப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், வடகரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் 5க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. இதனைக் கண்ட மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டிருந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அந்த யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர். சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறுவதை தடுக்கும் விதமாக அகழிகளை தூர்வாரி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.