தென்காசி பேருந்து விபத்து : தவெக தலைவர் விஜய் இரங்கல்..!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பேருந்து விபத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.