ஈஸ்டருக்கு தற்காலிக போர் நிறுத்தம் - ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதன்படி ஒரு பக்கம் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் போரில் பல உயிர்கள் பறிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
அந்த வகையில் அண்மையில் உக்ரைனின் சுமி நகரத்தில் ஈஸ்டரை முன்னிட்டு குருத்தோலை ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது, ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஈஸ்டரை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இது குறித்து கிரெம்ளினின் பத்திரிகை சேவை கூற்றுபடி, “மனிதாபிமானக் கருத்தில் கொண்டு, ரஷ்ய தரப்பில் ஈஸ்டரை முன்னிட்டு போர் தற்காலிக நிறுத்தத்தை அறிவிக்கிறேன்.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு நான் உத்தரவிடுகிறேன்” என்று புதின் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(ஏப்.19) மாலை 6 மணி முதல் நாளை (ஏப்ரல்.20) இரவு 9 மணி வரை( ரஷ்ய நேரப்படி) தற்காலிக போர் நிறுத்தத்தை புதின் அறிவித்திருக்கிறார்.