ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சந்தன உற்சவ விழா நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கோயிலில் புதிதாக கட்டப்பட்டிருந்த 20 அடி நீளமுள்ள சுவர் அதிகாலை சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த பலர் அருகில் இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்ற மீட்பு பணிகளை ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.