ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. இதில் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் கடந்த 2-ம் தேதி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் எஸ்கேஎம்மும் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டன.
இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து களம் கண்டது.
மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 130க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சியான ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எனவே தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்கு தேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராவது உறுதியாகி உள்ளது.
சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி அமராவதியில் பதவியேற்க உள்ளதாகவும் இந்த பதவியேற்பு விழாவில் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபு நாயுடுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.