“உண்மையை அப்படியே கூறுங்கள்... போரை பரபரப்பாக்குவதை நிறுத்துங்கள்” - இந்திய செய்தி ஊடகங்களை விமர்சித்த சோனாக்ஷி சின்ஹா!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், உண்மையை விட பொய்யான நாடகத்திற்கு இந்திய ஊடகங்கள் முன்னுரிமை அளிப்பதாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, மே 8 அன்று குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்தது. இதற்கு இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பல செய்திகளை ஊடகங்களே யூகித்து வெளியிடுகின்றன. இந்தியாவால் தாக்குதலுக்குள்ளாகாத பாகிஸ்தான் பகுதிகளை எல்லாம் குறிப்பிட்டு, தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் பல சித்தரிக்கப்பட்ட தாக்குதல் காட்சிகள், ஒலி பதிவுகள் கொண்ட வீடியோக்களை சில ஊடகங்கள் வெளியிட்டன.
இதனைத்தொடர்ந்து ஊடக நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விதமாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், தேசிய பாதுகாப்பு காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் துருப்புக்களின் நடமாட்டத்தை நேரடி அல்லது நிகழ்நேரத்தில் ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இந்த பதிவை குறிப்பிட்டு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார். அதில்,
“இந்திய செய்தி ஊடகங்கள் முழுவதும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள், ஒலிகள், அலறல்கள், கூச்சல்கள். ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?. உங்கள் வேலையை செய்யுங்கள். உண்மையை அப்படியே கூறுங்கள். மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குவதையும், போரை பரபரப்பாக்குவதையும் நிறுத்துங்கள். மக்கள் நம்பகமான செய்தி ஊடகத்தை கண்டறிந்து அதையே பின்பற்றுங்கள். செய்தி என்ற பெயரில் இந்த குப்பைகளைப் பார்ப்பதை நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.