"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!" - கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் "கேப்டன் பிரபாகரன்" திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
1991ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், விஜயகாந்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் ரசிகர்கள் அவரை "கேப்டன்" என்று அழைக்கத் தொடங்கினர்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படம் 4K தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரீ-மாஸ்டர் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், புதிய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில், நவீன திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
மேலும் டிரெய்லரில் உள்ள பிரமாண்டமான சண்டைக் காட்சிகள், அழுத்தமான வசனங்கள், மற்றும் இளையராஜாவின் பின்னணி இசை ஆகியவை மீண்டும் ஒருமுறை ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாவது, அவரது ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவமாக அமைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் ரீ-ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் மீண்டும் ஒருமுறை கேப்டனின் கர்ஜனையைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.