தெலங்கானா: நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதிய சொகுசுப் பேருந்து... முன் பகுதி நசுங்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு... 20 பேர் படுகாயம்!
தெலங்கானா மாநிலம் விகரபாத் மாவட்டத்தில் உள்ள பரிகி கிராமத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு, 60க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்றில் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரங்காப்பூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் படு பயங்கர வேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் பேருந்து முன் பகுதி நசுங்கி பாதி காணாமல் போன நிலையில், பேருந்துக்குள் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள், நண்பர்கள் என 60 பேர் பேருந்தை வாடகைக்கு பிடித்து அதில் திருமணத்திற்கு வந்து கலந்து கொண்டு திரும்பி செல்லும் போது விபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மரமடைந்தவர்கள் தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள
சந்தனவல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் விகரபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் யாதையா, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.