தேஜ் பிரதாப் யாதவ் பேஸ் புக் காதல் பதிவு - கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்த லாலு பிரசாத் யாதவ்!
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்-ன் மூத்த மகனும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் அமைச்சருமானவர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் சமீபத்தில் முகநூலில் ஒரு பதிவிட்டார். அதில், “நான் தேஜ் பிரதாப் யாதவ், இந்த புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் அனுஷ்கா யாதவ்! நாங்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம், காதலிக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் ஒரு உறவில் இருக்கிறோம்.
நான் இதை உங்கள் அனைவருடனும் நீண்ட காலமாகப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால், அதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனவே இந்தப் பதிவின் மூலம், என் மனதில் உள்ளதை உங்கள் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரின் இந்த முகநூல் பதிவு அனைவரது கவனத்தை ஈர்த்து சர்ச்சைக்குள்ளானது. அதன் பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது.
இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் அந்த பதிவு குறித்து தனது எக்ஸ் பதிவில் “ என்னுடைய சமூக ஊடக தளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன, என்னுடைய புகைப்படங்கள் தவறாக திருத்தப்பட்டு என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் துன்புறுத்தவும் அவதூறு பரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய நலம் விரும்பிகள் மற்றும் ஃபாலோவர்ஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம்” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிலிருந்து தேஜ் பிரதாப் யாதவ்-ஐ நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற நடத்தை ஆகியவை எங்கள் குடும்ப மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப இல்லை. எனவே, சூழ்நிலை காரணமாக, நான் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்குகிறேன். இனிமேல், அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்த விதமான பங்கும் இருக்காது.
அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் கொண்டவர். அவருடன் உறவு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும். பொதுவாழ்க்கையில் பொது அவமானத்தை நான் எப்போதும் ஆதரிப்பவன். கீழ்ப்படிதலுள்ள குடும்ப உறுப்பினர்கள் பொது வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகின்றனர்.” என்று கூறியுள்ளார்.
வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் இந்த ஆண்டு வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் போட்டியிடத் தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.