கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு - 2 பேர் உயிரிழப்பு!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில்அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
ஒடிங்காவின் மறைவு 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாடான கென்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. மோய் கால்பந்து மைதானத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்காக, அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் மக்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் கென்யாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.