"மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்" - முதலமைச்சர் #MKStalin!
அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், 2வது குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும். கல்வி துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும், மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களின் அர்பணிப்பை போற்றும் வகையில் இன்றைய தினம் கொண்டாட்டப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு #TeachersDay வாழ்த்துகள்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.