நீலகிரியில் காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறக்கூடிய காட்டு யானைகள் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பார்வுட் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (வயது 55) மற்றும் செல்லதுரை (வயது 48) ஆகிய இருவர் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு சென்றுள்ளனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டு யானை தாக்கியதில் சம்சுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த செல்லதுரை கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல்
சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்சுதீன் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.