ஆளுநர் #RNRavi அளிக்கும் தேநீர் விருந்து - அரசு சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு!
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆக. 15) தேநீர் விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறுகையில், “திமுக சார்பில் ஆளுநரின் தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” என தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கூறுகையில், “ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள்” என தெரிவித்தார். இதேபோல திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆனால் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் பங்கேற்போம் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை கோட்டையில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மருந்தாளுநர்கள் பயன்படும் வகையில் 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்படும். Genric Medicine என்ற வகையில் குறைந்த விலையில் மருந்து கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்படும். ஏழை, நடுத்தர மக்களுக்காக முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம். ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்பர்” என தெரிவித்தார்.