“தோல், ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைப்பு” - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) நடைபெற்றது.
கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவரது உரையில், “தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4% குறைக்கப்பட உள்ளது. அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 35% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முதல் முறையாக பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் ரூ.15,000 வரையிலான ஒரு மாத சம்பளத் தொகை 3 தவணைகளாக வழங்கப்படும். மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கு அடிப்படை இறக்குமதி வரிவிகிதம் குறைக்கப்படும்” என தெரிவித்தார்.