தவெக பொதுக்குழு கூட்டம் - வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. அதன்படி, சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், தொடங்கியது.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி,
"இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு,
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது,
சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்,
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்,
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை,
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்,
சென்னை ECR இல் உருவாகும் பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும்,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஏமாற்ற வேண்டாம். ஜாக்டா ஜியோ வலியுறுத்தும் 10 அம்ச கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்,
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான திமுக அரசுக்கு கண்டனம்,
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை,
தமிழக வெற்றி கழகத்தின் ஐம்பெரும் கொள்கை தலைவர்களின் வழியில் சமரசம் இன்றி பயணிக்க வேண்டும்,
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,
தேர்தல் சார்ந்த முடிவுகள், மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் சுற்றுப்பயணங்கள் தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு தலைவருக்கே முழு அதிகாரம்,
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும், கழகத்திற்காக அயராத உழைத்து மறைந்த செயல்வீரர்களுக்கு இரங்கல், உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.