தவெக விருது வழங்கும் விழா - தடபுடலாக தயாராகும் சைவ விருந்து!
தவெக சார்பில் மாணவர்களுக்கு இன்று விருது வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கான மதிய உணவு தடபுடலாக தயாரகி வருகிறது.
சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் சட்டமன்றம் வாரியாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளை தவெக சார்பாக கௌரவிக்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த பாராட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு, சட்டமன்ற வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்க உள்ளார்.
இன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்கூட்டியே மாணவர்களுக்கு டிஜிட்டல் மூலம் செயல்படுத்தும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாஸ் காண்பித்தால் மட்டுமே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனுமதியானது வழங்கப்படுகிறது. விழாவில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் விழா அரங்கிற்குள் தொலைபேசி,பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
இந்த நிகழ்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை மதிய உணவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்படுகிறது. மதிய உணவு முடிவுற்ற பிறகு மீண்டும் மாணவர்களை கௌரவிக்கும் விழாவானது மதியம் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சட்டமன்ற வரியாக ஒவ்வொரு மாணவர்களாக மேடைக்கு அழைத்து கௌரவிக்க உள்ளார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவாக சாதம், வடை,
அப்பளம், அவியல், மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரக்கறி, ஆனியன் மணிலா, வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார்,
தக்காளி ரசம் என அறுசுவை விருந்து தயாராகி வருகிறது. 9.30க்கு விழா தொடங்க உள்ளநிலையில் மதிய உணவுக்கான வேலைகள் தீவிரமான நடைபெற்று வருகிறது.
கட்சி தொடங்கிய பிறகு நடக்கும் விஜய்யின் முதல் நிகழ்ச்சி என்பதால் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஜய்யை பார்க்கும் மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக காத்துள்ளனர்.