ராணிப்பேட்டையில் 'ஜாகுவார்' ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!
ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு, அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெற்றது. உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு மற்றும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம் 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானது.
இதையும் படியுங்கள் :மகளிர் ஆசிய கோப்பை : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!
இந்நிலையில், ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது, இதற்கு அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை, தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.