டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர். தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம். கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
“நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமை சார்ந்ததாகும். இதில் மோசடி நடந்தால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. இதுபோன்ற நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கை பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசியலை பொருத்தவரை 'ஏ' பார்ட்டி ஆட்சியில் இருக்கும் போது 'பி' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். 'பி' பார்ட்டி ஆட்சியில் இருக்கும்போது 'ஏ' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை நீதிமன்றம் கவனிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் பரிசீலிக்க முடியும்.
இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது. டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்” இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.