“டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு” - அமலாக்கத்துறை அறிக்கை!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் அதன் தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றிதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“டாஸ்மாக் அலுவலகங்களில் நடந்த சோதனையின் போது, டிரான்ஸ்பர் போஸ்டிங்ஸ், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில டிஸ்டில்லரி நிறுவனங்களுக்குச் சாதகமாக இன்டென்ட் ஆர்டர்களில் முறைகேடு நடந்த ஆவணங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ30 அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. டிஸ்டில்லரி நிறுவனங்களான எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில் நிறுவனங்களுடன் பெரிய அளவில் பண மோசடி நடந்துள்ளது.
இதன் மூலம், சட்ட விரோத பணப் பறிமாற்றம் அம்பலமாகியுள்ளதோடு கணக்கில் காட்டாத ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததுள்ளது கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.