ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையும் மற்றும் பிப்ரவரி 8-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடையை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.