டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு - தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால், அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து வெறொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் முதலில் முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. அதன் பின்னர் மீண்டும் தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த நிலையில் டாஸ்மாக் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடகோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்து கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற பதிவாளர் வழக்கு வரும் 22ம் தேதி பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளார்