தஞ்சை | வேப்பத்தூரில் வீடுகளைச் சுற்றி சூழ்ந்துள்ள மழை நீர் - பொதுமக்கள் போராட்டம்!
தஞ்சை வேப்பத்தூர் கிராமத்தில் வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதால் வடிகாலைத் தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் தொடர் மழை காரணமாக வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்ற வடிகாலைத் தூர்வாரி தண்ணீரை வடிய வைக்க அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 50க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து 30 நிமிடத்திற்கு மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் அதிகாரிகளிடம் தகவல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் உறுதி அளித்தார்கள். அதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் கல்லணை பூம்புகார் பிரதான சாலையில் 30 நிமிடத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் இருந்த வடிக்காலைத் தூர்வாரி நீரை வெளியேற்றும் பணியில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அறிவுரையின் படி வருவாய் அலுவலர்கள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு தலைமையில் பொதுப்பணி துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.