#TNRains | எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - விவரம் இதோ!
கனமழை காரணமாக ஈரோட்டில் பள்ளிகளுக்கும் மற்றும் நாமக்கலில் ஒரு சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயர் சூட்டியுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : #Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!
அதன்படி, அதிகாலை முதலே ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.