கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்கத்தை வென்றது தமிழ்நாடு அணி!
கேலோ இந்தியாவின், யோகா விளையாட்டில் ரித்மிக் ஜோடி பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரட்டையர்கள் சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் 127.89 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனையர் பதக்கங்களை குவிக்கும் வகையில், 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 17 மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்ய, தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி, அதில் தேர்வாகும் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுவரை 5 மாநிலங்களில் போட்டிகள் நடந்து உள்ளன. இந்த ஆண்டு சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ போட்டிகளை நேற்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். துவக்க விழாவில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், இணையமைச்சர் நிசித் பிரமாணிக் பங்கேற்றனர். சென்னை தவிர திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் போட்டிகள் நடப்பதால் அந்நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட 25 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5,500 வீரர், வீராங்கனைகள், 1,600 பயிற்சியாளர்கள், 1,000 நடுவர்களும் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு உதவ 1,200 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற யோகா விளையாட்டில் ரித்மிக் ஜோடி பிரிவில், தமிழ்நாடு வீரர்கள் சர்வேஷ், தேவேஷ் இரட்டையர்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றனர். தமிழ்நாடு அணி 127.89 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் மேற்கு வங்கம் 127.57, மகாராஷ்டிரா 127.20 புள்ளிகள் பெற்று தோல்வி அடைந்தது.