கனமழை எதிரொலி : நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும்
மாவட்ட முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிர்பார்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளது.இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு
முதல் தொடர்ந்து காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குந்தா, அவலாஞ்சி, உதகை, தேவாலா, பந்தலூர், சேரங்கோடு, கூடலூர்
உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல்
தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :காவிரி விவகாரம் – தமிழ்நாட்டில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம்!
மழையின் காரணமாக ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டும் மரங்கள் முறிந்து
விழுந்தும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை உடனடியாக நெடுஞ்சாலைத்
துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சீர் செய்யும் பணிகளில்
தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் மழை பதிவாகியுள்ளதோடு இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் இரண்டு நாட்கள் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.