தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (டிச.10) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
"தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.10) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்."
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.