கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்காலில் அதி கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழையும், நாளை கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் அதி கனமழையும் பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு இன்று (நவ.26) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி தலைவர் தி .சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூரில் கனமழை முன்னெச்சரிக்கையாக காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலிலும் கனமழை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, கனமழை எச்சரிக்கை எதிரொலியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.