தமிழ்நாடு ஆளுநர் திடீர் டெல்லி பயணம்...!
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்.
தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகளால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் கவர்னரும் முதலமைச்சரும் நேரடியாக அமர்ந்து பேசினார்கள். ஆனாலும் இதன் விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த சூழலில் வரும் 12ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநரை உரை நிகழ்த்த வருமாறு, பேரவைத் தலைவர் அப்பாவு கடந்த 2ம் தேதி ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை தொடர்பான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். இந்த சூழலில் இந்த கூட்டத்தொடரில் உள்ள அம்சங்கள் குறித்து ஆளுநர் விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.