பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை | #Tamilnadu அரசு நடவடிக்கை!
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், அதன் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.33-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டிவிட்டது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர். இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : #Singapore முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறையில் தனி அறை!
இந்நிலையில், கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டிலுள்ள பிற பகுதிகளிலும் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்துக்குள் தக்காளி, வெங்காய விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.