போக்குவரத்து கழகங்களில் 2,877 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!
போக்குவரத்துக் கழகங்களில் 2,877 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலமாகத் தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இடக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை இருப்பதால் பெரும்பாலான மக்கள் தினசரி போக்குவரத்துக் கழக பேருந்து சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததன் காரணமாகச் சேவையை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 2,877 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் & நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டிசிசி பணியில் 2,340 காலியிடங்களும், 537 தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது.
இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்பப் பணியாளர்கள் என்று மொத்தம் 769 காலி இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2,108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.