எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவுக்கு காரணம் என்ன? - சிபிசிஎல் விளக்கம்!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆலையில் தேங்கி இருந்த எண்ணெய்க் கசிவுகள் கால்வாயில் வெளியேறி இருக்கலாம் என்று சிபிசிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிசிஎல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
"மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக டிச.4-ஆம் தேதி பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து சுமார் 48,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக சிபிசிஎல் நிறுவனத்துக்குள் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆலை வளாகத்துக்குள் தேங்கி இருந்த எண்ணெய்க் கசிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிருக்கலாம்.
மேலும், பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் பணியில் சிபிசிஎல் நிர்வாகம் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : விருதுநகரிலும் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..!
எண்ணெய் படலங்களை அகற்ற சுமார் 20,000 எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,430 மீ நீளம் கொண்ட எண்ணெய் உறிஞ்சும் தடுப்பான்கள் பக்கிங்ஹாம் கால்வாய் முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.இந்தப் பணியில் 110 படகுகள், 440 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பணியாளர்களுக்கு 600 கையுறைகள், 1,000 முகக்கவசங்கள், 750 காலணிகள், 500 தலைக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு நிவாரணமாக 11,000 அரிசி பைகள், 6,000 மளிகைப் பொருள்கள், 3,,000 சேலைகள், வேட்டிகள், பெண்களுக்கான ஆடைகள், போர்வைகள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.