வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - புயலாக மாற வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 27 ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு | மகிழ்ச்சியில் இந்தியா!…
இதனைத் தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது புயலாக வலுப்பெறும்பட்சத்தில் தமிழ்நாடு முதல் ஒடிசா இடையே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.