தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!
தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் 1999-ல் பாஜக உறுப்பினரானார். அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் வரை உயர்த்தியது. 2009 மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்தார். இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். 2021 பிப்ரவரி 16 ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்!
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு நேற்று தமிழிசை சௌந்தரராஜன் ராஜிநாமா கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார். மேலும், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவித்துள்ளார்.