ஏப். 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்:
“எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்” என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
தமிழ் இலக்கியம் போற்றுவோம்:
புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.
பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:
மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:
தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
"தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.
பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்” என தெரிவித்தார்.