“புதிய கல்வி கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு மாறாது” - மாநிலங்களவையில் கனிமொழி சோமு பேச்சு!
மாநிலங்களவையில் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி சோமு பேசியதாவது;
“தமிழ்நாடு அரசு எந்த தருணத்திலும் புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். தமிழ்நாட்டுக்கான கல்விக்கான நிதியை வழங்காமல் இருப்பது மூலம் மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக உள்ளது.
இருமொழி கொள்கையில் எந்த மாற்றம் இல்லை என்பதை ஆணித்தரமாக மீண்டும் தமிழக முலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருமொழி கொள்கையை கடைபிடிக்கும் தமிழ்நாடு கல்வியில் உயர்ந்து நிற்கிறது. கடந்த 57 ஆண்டுகளில் தமிழகம் உலக அளவில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கல்வி தரத்தில் வளர்ந்து நிற்கிறது.
தமிழகம் தற்போது எட்டியிருக்கும் கல்வி வளர்ச்சியை இந்தியாவின் பல பிற மாநிலஙகள் அடைய இன்னும் 2 அல்லது மூன்று தலைமுறை ஆகும். புதிய கல்வி கொள்கை என்பது மறைமுகமாக இந்தியை திணிக்கவே வழி வகுக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க அல்லாத அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்க்கிறது. நிதி விடுவிக்காமல் உள்ளனர் என்பதற்காக மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்பதை தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இது மாணவர்களின் கல்வி சார்ந்த விவகாரம் மட்டுமல்ல அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவமும் கூட. எனவே மத்திய அரசு இதற்கு மேல் தாமதிக்காமல் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்” எனப் பேசினார்.