“கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய, ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபாலகவுடா, முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“பள்ளிக்கல்வித்துறை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டங்களும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. 234 தொகுதிகளிலும் பள்ளிகளை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் அன்பில் மகேஷ். ஆண்டுதோறும் பொதுத் தேர்வு முடிவு தேர்ச்சி விகிதங்கள் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்து வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாக இந்த ஆட்சியை மாற்றி உள்ளார். துணிச்சலோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் அன்பில் மகேஸ். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி கொள்கையை விட்டு தர மாட்டோம். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டினை நாசப்படுத்திட புதியக் கல்வி கொள்கையை கொண்டு வந்தது மத்திய அரசு.
இன்று நாடு இருக்கும் நிலைக்கு இந்த புத்தகம் மிகவும் அவசியம். கல்வியை காவியாக மாற்ற வேண்டும் என இந்த கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. தன்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
தேசிய கல்விக் கொள்கையை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணம் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திமுக மாடல். இவர்கள் தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல். அறிவுதான் நமது ஆயுதம். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக குரல் எழுப்ப காரணம், இந்த கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும்.
இட ஒதுக்கீடு இருக்கும் வரைதான் ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி கிடைக்கும். 75 ஆண்டுகால பன்முகத்தன்மையை சிதைத்து, சமஸ்கிருதம் என்ற ஒற்றை முகத்தை கொண்டு வருவதுதான் மத்திய அரசின் சித்தாந்தம். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிப்பதற்கான முயற்சி இது.
இதை தடுக்க ஒரேவழி கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதுதான். அதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படாவிட்டால் அனைவருக்குமான கல்வி என்பது எட்டாக் கனியாக மாறிவிடும்.
பிரதமரிடம் ஒருமுறை நேரடியாக நான் வலியுறுத்தி உள்ளேன், “மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்பட்ட பண்பாடுகளை கொண்ட நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் படிக்க வேண்டும்; எந்த பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்ற முடிவு, மாநில அரசுக்குத்தான் இருக்க வேண்டும் என்று”. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய பெட்டி அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்.
அன்பில் மகேஸ் அன்பில்,அறிவில், ஆற்றலில், பண்பில், பாசத்தில், பேச்சில் என்ற அந்த வரிசையில் இப்போது எழுத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார்” என தெரிவித்தார்.