தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் - சென்னையில் குவியும் நிர்வாகிகள்!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு வரும் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொதுக்குழு நடக்கும் மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலில் 'கியூஆர் கோடு' ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனைவரும் கூட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.