முதன்முதலாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு முதன்முதலாக இதுபோன்ற பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்படுகிறது. பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது பொருளாதாரத்தின் நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் பற்றிய டேட்டாக்களை கொண்டு இருக்கும். நடப்பு ஆண்டிற்கான பொருளாதாரம் எப்படி இருக்கும், ஜிடிபி எப்படி இருக்கும், விலைவாசி எப்படி இருக்கும், பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களையும் இது வழங்கும்.
பொருளாதார ஆய்வு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆவணத்தின் முதல் பகுதியில் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். இது பொருளாதாரம் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பாய்வையும் வழங்கும். இரண்டாம் பாகம் கடந்த நிதியாண்டில் பணவீக்கம், ஜிடிபி ஆகியவை பற்றிய விவரங்களை கொண்டு இருக்கும்.