தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நாளை ஆலோசனை!...
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (பிப்.19) காலை நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.